95 வயதான லீ மான்-ஹீ விவகாரம்: மனித உரிமை கோரிக்கை

95 வயதான லீ மான்-ஹீ விவகாரம்: மனித உரிமை கோரிக்கை

சென்னை:

தென் கொரியாவைச் சேர்ந்த 95 வயதான உலக அமைதி செயற்பாட்டாளர் லீ மான்-ஹீ தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரது வழக்கில் மனிதாபிமான அணுகுமுறையைப் பின்பற்ற வலியுறுத்தி சென்னையில் மனித உரிமைகள் மற்றும் மதச் சுதந்திர மாநாடு நடைபெற்றது.

 

சென்னை பென்டகன் ஹோட்டலில் நடைபெற்ற இம்மாநாட்டில் மனித உரிமை ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சர்வதேச அமைதி அமைப்பான HWPL-இன் நிறுவனரான திரு. லீ மான்-ஹீ, பல தசாப்தங்களாக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வருபவர். அவர் தென்கொரியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

மனிதாபிமான அணுகுமுறை தேவை

மாநாட்டில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், 95 வயதான முதியவர் ஒருவரைத் தடுப்புக்காவலில் வைத்திருப்பது கடுமையான மனிதாபிமான கவலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டனர். சர்வதேச அளவில் பரவலாக அறியப்பட்ட அவர் தப்பிச் செல்வார் என்ற வாதம் ஏற்புடையதல்ல என்றும், நெல்சன் மண்டேலா விதிகளின்படி அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உரிய பராமரிப்பும், சட்ட உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.

 

மெரினாவில் போராட்டம் நடத்தத் தயார்

ஆல் இந்தியா இன்டிக்ரேட்டட் லா வெல்ஃபேர் அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் சிவகுமார் பேசுகையில், “தலைவர் லீ மீதான நடவடிக்கை பழிவாங்கும் செயலாகத் தெரிகிறது. அவர் தொடர்ந்து அநீதியை எதிர்கொண்டால், அவருக்கு ஆதரவாகச் சென்னை மெரினா கடற்கரையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்,” என எச்சரித்தார்.

 

சென்னை உயர்நீதிமன்ற நிலை வழக்கறிஞர் பர்னபாஸ் கூறுகையில், லீ மான்-ஹீ மனிதகுலத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ள நல்ல நோக்கங்களைக் கொண்ட முதியவர் என்றும், அவரது விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

 

மனித உரிமை வழக்கறிஞர் ஜி. முருகேஷ் குமார் தனது உரையில், “முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்துள்ள 95 வயது முதியவரைத் தடுப்புக்காவலில் வைப்பது தீவிரமான மனித உரிமை மீறலாகும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற சட்டத்தின் அடிப்படைத் தத்துவம் இங்கு மதிக்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார்.

 

தங்கள் கோரிக்கை தென் கொரிய மக்களுக்கோ, நாட்டிற்கோ எதிரானது அல்ல எனத் தெளிவுபடுத்திய பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் நியாயமான நடைமுறைகளை மட்டுமே கோருவதாகத் தெரிவித்தனர். முதியவர் லீ மான்-ஹீயின் வழக்கை மனிதக் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் கையாள வேண்டும் எனத் தென் கொரிய அதிகாரிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இம்மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.

www.faceinews.com